பக்தர்களின் நீண்டகால கனவு நனவானது… போடி பரமசிவன் மலைக்கோயிலுக்கு ரூ.1 கோடியில் புதிய தார்ச்சாலை மற்றும் பாலம் தயார்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அம்பிகா உடனுறை பரமசிவன் மலைக்கோயில் அமைந்துள்ளது. போடி சுப்புராஜ் நகரிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்குச் செல்ல நீண்டகாலமாக மண்பாதையே பயன்பாட்டில் இருந்து வந்தது. குறிப்பாகச் சித்திரை திருவிழா காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கரடுமுரடான பாதையையே பயன்படுத்தி வந்தனர். இது தவிர, கோயிலுக்குப் பின்புறம் உள்ள விளைநிலங்களுக்குச் செல்லும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், 18-ம் கால்வாய் பகுதிக்குச் செல்வோருக்கு இதுவே பிரதான பாதையாகத் திகழ்ந்தது. மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் இச்சாலையைச் சூழ்ந்து வஞ்சியோடைக்குச் செல்வதால், இப்பகுதியைக் கடப்பது பெரும் சவாலாக இருந்து வந்தது. இந்தப் பாதையைத் தார்ச்சாலையாக மாற்றி, ஓடையின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்ற மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார்.

முதலமைச்சரின் உத்தரவின் பேரில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, போடி நகர்மன்றத் தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், நீர்த்தேக்க மெயின் குழாய்கள் பழுதாகாமல் இருக்க வேண்டிய சூழல் மற்றும் ஒப்பந்ததாரர்களின் காலதாமதத்தால் பணிகள் இடையில் தொய்வடைந்தன. இது குறித்து நகராட்சிப் பொறியாளர் குணசேகரன் ஆய்வு செய்து உரிய விளக்கம் அளித்திருந்தார். இந்தப் பணித் தொய்வு குறித்து ‘தினகரன்’ நாளிதழ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தியின் அதிரடி எதிரொலியாக, நகராட்சி நிர்வாகம் பணிகளை முடுக்கிவிட்டது. தற்போது ஓடையின் குறுக்கே உறுதியான பாலம் கட்டி முடிக்கப்பட்டதுடன், அதன் இருபுறமும் சரளைகள் கொட்டப்பட்டு முழுமையாகத் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு, விவசாயிகள் முந்தல் சாலையைச் சுற்றிச் செல்லாமல் சுப்புராஜ் நகர் வழியாகத் தங்களது விளைநிலங்களுக்கு விரைவாகச் செல்ல முடிவதாலும், பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி மலைக்கோயிலை அடைய முடிவதாலும் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Exit mobile version