புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டாலே நிறுவனம் வந்துவிடாது : இபிஎஸ் சாடல்

மதுரை: “புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டாலே தொழிற்சாலை வந்துவிடாது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் வணிகர்கள் சங்க பிரதிநிதிகளை சந்தித்த அவர் பேசியதாவது :
“அதிமுக ஆட்சிக்காலத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி பல முதலீடுகளை ஈர்த்தோம். ஒரு தொழிற்சாலை உருவாக வேண்டுமென்றால், புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் போதாது. நிலம், முதலீட்டிற்கு தேவையான நிதி ஆதாரம் போன்ற அடிப்படை வசதிகள் அமைய வேண்டும். இதற்கெல்லாம் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும். சில நேரங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியும் தொழிற்சாலை தொடங்காமலும் போய்விடும். எனவே ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் தொழில் வந்துவிட்டது என்று கருத முடியாது,” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது :
“தொழில்கள் வளர்ச்சி அடைய சர்வதேச விமான நிலையங்கள் அவசியம். அதற்கான நடவடிக்கைகள் அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டன. எங்களுக்கு தற்போது லோக்சபாவில் எம்.பி.க்கள் இல்லாவிட்டாலும், தமிழக மக்களின் நலன் கருதி மத்திய அரசுடன் இணைந்து தொழில்வளம் பெருக உதவி செய்வோம். வேலைவாய்ப்புகளை உருவாக்க சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்கு அதிமுக முன்னுரிமை தரும். அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு உறுதியாகப் பாதுகாக்கப்படும்,” எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Exit mobile version