கிணத்துக்கடவு, பொள்ளாச்சியில் மினி ஸ்டேடியம் உள்ளிட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பவன்குமார் க. கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்:வடசித்தூர் ஊராட்சியில் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் மற்றும் அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளைப் பார்வையிட்டார்.

கொண்டாம்பட்டி ஊராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையப் பணி மற்றும் கால்நடை மருத்துவமனையில் போர்வெல் பம்பு மோட்டார் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். ‘அமிர்த சரோகர்’ திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ள கொண்டாம்பட்டி குட்டையைப் பார்வையிட்டார். அரசம்பாளையம் மயானம் அருகில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் நடப்பட்டுள்ள பலவகையான மரக்கன்றுகளைப் பார்வையிட்டார். அரசம்பாளையம் வடசித்தூர் முதல் குரும்பபாளையம் வரை ரூ.18.45 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தார்சாலை மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர், சாலையைத் தரமாகவும் விரைவாகவும் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ‘மினி ஸ்டேடியம்’ கட்டுமானப் பணிகளைக் கலெக்டர் நேரில் பார்வையிட்டார். பணிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்துப் பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, நகராட்சி ஆணையர் குமரன், கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஷ்குமார், மோகன்பாபு, வட்டாட்சியர் குமரிஆனந்தன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் மக்களிடம் உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என ஆய்வின் முடிவில் கலெக்டர் அறிவுறுத்தினார்.

Exit mobile version