ராமநாதபுரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக, உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு மற்றும் பாராட்டு விழா முகமது சதக் தஸ்தகீர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வை மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சமூகத்தில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவத் தேவைகளை உறுதி செய்யவும் தமிழக அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த விழா ஒருங்கிணைக்கப்பட்டது. விழாவின் தொடக்கமாக, மாவட்டத்தில் எச்.ஐ.வி தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 15 அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கலெக்டர் கௌரவித்தார். இதனைத் தொடர்ந்து, கலெக்டர் தலைமையில் அரசு அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் “எய்ட்ஸ் இல்லாத சமூகத்தை உருவாக்குவோம்” என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை நேரடியாகக் கொண்டு செல்லும் நோக்கில், எய்ட்ஸ் குறித்த தகவல்கள் அடங்கிய பிரத்யேகப் பிரச்சார வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனமானது மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களுக்கும் சென்று, சந்தைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலிபெருக்கிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தும். மேலும், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் கலெக்டர் தொடங்கி வைத்து தனது ஆதரவைப் பதிவு செய்தார். நிகழ்ச்சியில் பேசிய கலெக்டர், தமிழ்நாடு அரசின் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத் துறையின் தொடர் கண்காணிப்பு காரணமாக, எச்.ஐ.வி பாதிப்பு விகிதம் மாநில அளவில் 0.18 சதவீதமாகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் மாநில சராசரியை விடக் குறைவாக 0.12 சதவீதமாகவும் சரிந்துள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மாவட்டத்தில் தற்போது 15 எச்.ஐ.வி பரிசோதனை மையங்கள், ஒரு கூட்டு மருந்து சிகிச்சை மையம் (ART Centre) மற்றும் மூன்று இணை கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டில் இதுவரை 97,989 நபர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், புதிதாகத் தொற்று கண்டறியப்பட்ட 89 நபர்களுக்கும் உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 214 குழந்தைகளுக்கு அவர்களின் கல்வி மற்றும் சத்தான உணவுத் தேவைகளுக்காக மாதம் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு. அர்ஜுன் குமார், மாவட்ட திட்ட மேலாளர் வேலையா, விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் உட்படப் பல முக்கியத் துறை அதிகாரிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

















