மேடையை ஒருங்கிணைத்த ஆட்சியர் ; நெகிழ்ச்சியில் ஆசிரியர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தின் 2024-2025-ஆம் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பாராட்டு விழாவில், கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்றுத் தந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரளாகப் பங்கேற்றனர். ஆசிரியர்கள் மொத்தம் 1100 கௌரவிக்கப்பட்டனர்.

வழக்கமாக இதுபோன்ற அரசு விழாக்களில், நேரமின்மை காரணமாக பள்ளி வாரியாக ஆசிரியர்களை மேடைக்கு அழைத்து, மாவட்ட ஆட்சியருடன் ஒரு குழு புகைப்படம் (Group Photo) எடுக்கப்பட்டு சான்றிதழ்கள் மொத்தமாக வழங்கப்படும்.
இந்த விழாவிலும் அதுபோன்றே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மேடைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், அந்தத் திட்டத்தை மென்மையாக மறுத்தார்.

“ஒரு ஆசிரியர் தனது வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்து இந்த 100% வெற்றியை ஈட்டியிருக்கிறார். அந்த உழைப்பிற்கு மரியாதை செய்யும் விதமாக, எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை, நான் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியாக சான்றிதழ் வழங்கி, அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன்”
என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து மேடையில் நின்றிருந்த ஆசிரியர்களை, “ஆசிரியர்களே, தயங்காமல் வாருங்கள்… இப்படி நில்லுங்கள், கேமராவை பாருங்கள்” என அவரே முன்னின்று ஒருங்கிணைத்தார். ஒரு மாவட்டத்தின் தலைமை அதிகாரி என்ற பிம்பத்தைத் தாண்டி, தனது ஆசிரியர்களுக்கு ஒரு மாணவனைப் போல நின்று அவர் உதவி செய்த விதம், “அட, நம்ம கலெக்டரே இப்படி இறங்கி வேலை செய்கிறாரே!” என அங்கிருந்தோரை வியக்க வைத்தது. தொடர்ந்து தனித்தனியாக சான்றிதழ் வழங்கி புகைப்படம் எடுத்து முடிக்கும் வரை அவர் சோர்வின்றி புன்னகையுடனே காணப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் இந்த எளிமையான அணுகுமுறையும், ஆசிரியர்கள் மீதான அவரது மதிப்பும் சமூக வலைதளங்களில் தற்போது பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

Exit mobile version