தமிழகத்தின் உழைக்கும் வர்க்கத்தினரின் நலனைப் பாதுகாப்பதிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் திண்டுக்கல்லில் கட்டப்பட்டுள்ள புதிய உழைப்பாளர் நலக்கூடத்தைச் சென்னையில் இருந்தபடி காணொலிக்காட்சி வாயிலாக கடந்த 4-ம் தேதி திறந்து வைத்தார். திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள காட்டாஸ்பத்திரி பேருந்து நிறுத்தம் அருகில், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நலக்கூடம், இனி வரும் காலங்களில் அப்பகுதி கட்டுமானத் தொழிலாளர்களின் புகலிடமாகத் திகழவுள்ளது. இந்தத் திறப்பு விழாவைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் நடைபெற்ற நேரடி நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சரவணன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, உழைப்பாளர் நலக்கூடத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முறைப்படி அர்ப்பணித்தனர்.
இந்த விழாவில் எழுச்சியுடன் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் சரவணன், கட்டுமானத் தொழிலாளர்கள் அதிகாலை வேளையில் பணிக்குச் செல்வதற்கு முன்பாக ஓரிடத்தில் ஒன்று கூடி காத்திருப்பது வழக்கம், அவ்வாறு அவர்கள் காத்திருக்கும் நேரங்களில் வெயிலிலும் மழையிலும் அவதிப்படாமல், அவர்களுக்குக் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஓரிடத்தில் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் முதலமைச்சர் இந்த நலக்கூடங்களை அறிவித்ததாகக் குறிப்பிட்டார். அதன்படி திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் தொழிலாளர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாகும். மேலும், இந்த விழாவின் முக்கிய அங்கமாக 1,577 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சுமார் ரூ.66.86 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி மற்றும் விபத்து மரண உதவித்தொகைகள் அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக (DBT) செலுத்தப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 83,627 புதிய உறுப்பினர்கள் நலவாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற மகிழ்ச்சியான தகவலையும் பகிர்ந்த ஆட்சியர், இதுவரை 1.21 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் ரூ.139 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தொழிலாளர்கள் தங்கள் காத்திருப்பு நேரத்தை இந்த நலக்கூடத்தில் பயனுள்ள வகையில் கழிக்கலாம் என்றும், வாரியத்தில் இணையாத சக தொழிலாளர்களையும் இதில் சேர்க்க முன்னின்று செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த விழாவில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) இராஜ்குமார், மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா மற்றும் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அலுவலர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் திண்டுக்கல் மாவட்ட உழைப்பாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

















