ஜனவரி 7ல் திண்டுக்கல் வருகிறார் முதல்வர்: ரூ.3,000 கோடி மதிப்பிலான திட்டங்கள்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவும், புதிய வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் வரும் ஜனவரி 7-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆய்வுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் பூங்கொடி, சச்சிதானந்தம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, முதல்வரின் இந்த வருகை திண்டுக்கல் மாவட்ட வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று தெரிவித்தார். சுமார் ரூ.3,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதுடன், முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்து 2 லட்சம் பயனாளிகளுக்கு நேரடி நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். குறிப்பாக, திண்டுக்கல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ‘புறநகர் பேருந்து நிலைய’ப் பணிகளை இந்த விழாவின் போது முதலமைச்சர் தொடங்கி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாநகராட்சி விரிவாக்கம் குறித்த மக்களின் அச்சங்களுக்குப் பதிலளித்த அமைச்சர், மாநகராட்சியுடன் இணைக்கப்படும் பகுதிகளில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் மக்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர் என்றும், இது குறித்து உரிய ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலையைச் சர்வதேச தரத்திலான சுற்றுலாத் தலமாக மாற்ற ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பல்லுயிர் பூங்காவும் முதலமைச்சரின் இந்தப் பயணத்தின் போது திறந்து வைக்கப்பட உள்ளது. “திட்டங்கள் வருமா, வராதா என எதிர்மறையாகக் கேட்க வேண்டாம்; அனைத்தும் பாசிட்டிவாக நடக்கும், பணிகள் மின்னல் வேகத்தில் நிறைவேற்றப்படும்” என அமைச்சர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Exit mobile version