சென்னை: 2031ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் கொத்தடிமைகள் இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை வகுத்து வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 79வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கொத்தடிமைகள் எனும் பெயரில் மனித உழைப்பை சுரண்டும் அவலம் இன்னும் சில பகுதிகளில் நீடித்து வருகிறது. அரசு மற்றும் சமூக அமைப்புகளின் முயற்சியால் இதுவரை பல கொத்தடிமைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட சிலர் தங்களது வாழ்க்கை அனுபவங்களை நியூஸ் 18 தொலைக்காட்சியிடம் பகிர்ந்தனர். திருவள்ளூரைச் சேர்ந்த குப்பம்மாள் தனது குடும்பம் கொத்தடிமை வலையிலிருந்து மீட்கப்பட்டதை நினைவுகூர்ந்தார். விழுப்புரத்தைச் சேர்ந்த சங்கீதா, தனது பெற்றோர் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பின் தான் கல்வியில் முன்னேறி, தற்போது செவிலியராகப் பணியாற்றி வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், “கொத்தடிமை என்பது ஒரு சமூக அவலம். இதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். கொத்தடிமைகளின் மறுவாழ்வுக்காக அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது” எனக் கூறினார்.