திருவாரூர் :
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில், முதல்வர் எம்.கே. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
நாகப்பட்டினத்தில் பிரசாரம் முடித்து திருவாரூரில் உரையாற்றிய அவர், விவசாயிகளை குறிக்கும் வகையில் பச்சை துண்டு கட்டிக்கொண்டு மேடையேறினார். அப்போது பேசுகையில்,
“நீண்ட நாளாக ஓடாத திருவாரூர் தேரை இயக்கியவர் குறித்து பெருமைப்படுகிறார்கள். ஆனால், அவரின் மகன் தமிழ்நாடு என்னும் தேரை ஓடவிடாமல் நிறுத்திவிட்டார்.
சொந்த மாவட்டம் என்று சொல்லப்படும் திருவாரூர், இன்று ‘கருவாடாக காய்ந்து’ கிடக்கிறது.
மாவட்ட தலைநகரம் என்றாலும், சாலை வசதிகள் மிக மோசமாக உள்ளன. பஸ் நிலையமே கூட தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படவில்லை.
இங்கிருக்கும் கல்லூரியில் அனைத்து படிப்புகளும் உள்ளனவா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “இந்த மாவட்டத்தை சேர்ந்த ஒரு மந்திரி இருக்கிறார். ஆனால் அவரின் வேலை, மக்களுக்காக அல்ல; முதலமைச்சர் குடும்பத்திற்காக மட்டுமே. டெல்டா விவசாயிகள் நெல்லை விற்கும் போது, மூட்டைக்கு ரூ.40 என கமிஷன் பறிக்கப்படுகிறது. கடந்த 4 வருடங்களில் கோடிக்கணக்கான தொகை விவசாயிகளிடம் இருந்து இழுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும்” என்றும் குற்றம்சாட்டினார்.
அதோடு, “40க்கு 40 என்பது உங்களது தேர்தல் கனவு ஆகலாம். ஆனால் விவசாயிகளுக்கு அது அவர்களுடைய வயிற்றில் பறிக்கப்பட்ட பணம். குடும்ப ஆதிக்கமில்லாத தமிழகம் தான் எங்கள் குறிக்கோள். நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகளை மட்டுமே நாங்கள் தருவோம்” என வலியுறுத்தினார்.
பின்னர் கூட்டத்தில் இருந்த தொண்டர்களை நோக்கி, “எங்கே சென்றாலும் இது சும்மா கூடிய கூட்டம், வாக்குகளாக மாறாது என்று சொல்கிறார்கள். அது உண்மையா?” எனக் கேட்டார்.