கோவை மாநகரின் முக்கிய ஆன்மீகத் தலங்களில் ஒன்றான மேட்டுப்பாளையம் சாலை அய்யப்ப சுவாமி திருக்கோயிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலத்தை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் தினசரி வழிபாடுகளைச் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் புதிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பனின் 18 படிகளை நினைவுபடுத்தும் விதமாக, அன்றாடம் படி பூஜை மற்றும் ஆராதனைகளை மேற்கொள்வதற்காக 18 மூத்த குருசாமிகளுக்குப் படி பூஜை உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று பக்திப் பெருக்குடன் நடைபெற்றது. சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் குருசாமிகள், தங்கள் இல்லங்களிலும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள பஜனை கூடங்களிலும் முறையாகப் படி பூஜை நடத்தி அய்யப்பனின் அருளைப் பெறச் செய்வதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
இந்தச் சிறப்பு நிகழ்வில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவருமான வானதி சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். அவர் 18 குருசாமிகளுக்கும் படி பூஜைக்கான புனித படிகள் மற்றும் பூஜை பொருட்களை வழங்கி கௌரவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், நமது பாரம்பரிய கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையிலும் இத்தகைய ஆன்மீக நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படுவது பாராட்டுக்குரியது என்றார். சபரிமலைக்கு மாலை அணிந்து விரதமிருக்கும் கன்னிசாமிகள் முதல் பெரியசாமிகள் வரை அனைவருக்கும் முறையாகப் பூைஜ செய்யும் முறைகளைக் கற்றுக்கொடுப்பதில் குருசாமிகளின் பங்கு அளப்பரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விழாவில் கோயில் நிர்வாகக் குழுவினர், பல்வேறு அய்யப்ப பக்தர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். சபரிமலை ஐயப்பனின் புனிதப் பயணக் காலம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், கோவையில் இத்தகைய படி பூஜை உபகரணங்கள் வழங்கப்பட்டது பக்தர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழாவின் நிறைவாக ஐயப்ப சுவாமிக்குச் சிறப்பு நெய் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

















