“கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்” என தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்புப் பொதுச் செயலாளரும், தலைமை நிலையச் செயலாளருமான அருண்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இந்தி தினத்தை முன்னிட்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் வெளியிட்டிருந்த செய்தியில், “இந்தி தொழில்நுட்பம், அறிவியல், நீதி, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாற வேண்டும்; இந்தியா மொழியியல் ரீதியாக தன்னிறைவு பெறுவதில் இந்தி முக்கிய பங்கு வகிக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த அருண்ராஜ், “22 அலுவல் மொழிகள் கொண்ட நாட்டில், ஒரே மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது எதேச்சதிகாரப் போக்கு. பன்முகத்தன்மை கொண்ட தேசத்தில் ‘ஒரே நாடு, ஒரே மொழி’ கொள்கையை திணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழகத்தின் இருமொழிக் கொள்கை எங்கள் கட்சியின் நிலைப்பாடு. யார் வேண்டுமானாலும் எந்த மொழியையும் கற்கலாம், ஆனால் வலுக்கட்டாய திணிப்பு ஏற்க முடியாது” என்றார்.
மேலும் அவர், “தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் இந்தியைத் திணிக்க பாஜக அரசு முனைந்தது. ஆனால் தொடர்ந்து தோல்வி கண்டபோதிலும், மீண்டும் அதையே திணிக்க முயல்கிறது. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான இந்த நிலைப்பாட்டை மத்திய அரசு கைவிட வேண்டும். ஒன்றிய உள்துறை அமைச்சர் தெரிவித்த கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும்” எனக் கடுமையாகக் கண்டித்தார்.
