தமிழக ஏற்றுமதி துறைக்கு அமெரிக்கா விதித்த அதிக வரி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரியால் சுமார் ரூ.3,000 கோடி வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே. எம். சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அந்த செய்தியை மேற்கோள் காட்டி, சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது :
“அமெரிக்கா விதித்த அதிக வரியால் தமிழக ஏற்றுமதி துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் மட்டும் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
தமிழக தொழில்துறை மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு அவசர நிவாரணம் மற்றும் தேவையான சலுகைகளை வழங்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.