தொழில் துறைக்கு தேவையான அரிய வகை கனிமங்கள் (Rare Earth Minerals) கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாக தகவல் தொழில்நுட்ப மற்றும் இரயில்வே துறை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மின்னணு பொருட்கள், பசுமை எரிசக்தி, ராணுவ தளவாடங்கள் மற்றும் உயர் தொழில்நுட்பம் கொண்ட உற்பத்திகளுக்கு இத்தகைய கனிமங்கள் அவசியம் தேவைப்படுகின்றன. தற்போது சீனா அதிகளவில் இந்த கனிமங்களை வைத்திருப்பதோடு, அதன் ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் உலகளவில் அரிய வகை கனிமங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்த நிலையில், இந்திய தொழில்துறைக்கு இக்கனிமங்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “மின்னணு உற்பத்தித் துறைக்கு தேவையான அரிய வகை கனிமங்கள் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. வினியோக சங்கிலி (Supply Chain) சிறப்பாக உள்ளது. கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது,” என்றார்.
மேலும், பிற நாடுகளில் இருந்து இக்கனிமங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளை சுரங்க அமைச்சகம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் அதன் முடிவுகள் வெளிப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், உள்நாட்டிலேயே அரிய வகை கனிமங்களை கண்டறிந்து, சுரங்கம் செய்து பயன்படுத்தும் வகையில் 16,300 கோடி ரூபாய் மதிப்பில் தேசிய அளவிலான திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. பசுமை எரிசக்தி, உயர் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கான கனிமங்களில் தன்னிறைவு அடைவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.