தர்பங்கா : வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த மகளின் கணவரை, அவரது தந்தையே கண்முன்னே சுட்டுக் கொன்ற குரூர சம்பவம் பீகார் மாநிலத்தை உலுக்கியுள்ளது.
தர்பங்காவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் படித்து வந்த ராகுல் குமார் (வயது 25) என்பவருக்கும், அதே கல்லூரியில் முதலாமாண்டு மாணவியான தானுபிரியாவுக்கும் இடையே காதல் உருவாகி, இருவரும் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு தானுபிரியாவின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் ஒரு விடுதியின் வெவ்வேறு தளங்களில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை ஹூடி அணிந்த ஒரு மர்ம நபர், ராகுலை துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் போலீஸ் விசாரணையில், சுட்ட நபர் தானுபிரியாவின் தந்தை சங்கர் ஜா என்பது உறுதியானது.
“என் கண்களுக்கு முன்னே என் தந்தை என் கணவரை சுட்டார்” எனக் கூறிய தானுபிரியா, “என் கணவர் என் மடியில் விழுந்தார். என் முழு குடும்பமும் இந்த சதியில் ஈடுபட்டுள்ளது. முன்னதாகவே நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரி மனுவும் அளித்திருந்தோம்” எனக் கூறினார்.
இதுகண்ட ராகுலின் நண்பர்கள் மற்றும் விடுதி மாணவர்கள் சங்கர் ஜாவை தாக்கி அடித்து உதைத்தனர். தற்போது அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக தர்பங்கா மாவட்ட நீதிபதி கௌஷல் குமார் மற்றும் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஜெகநாத் ரெட்டி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். நிலைமையை கட்டுப்படுத்த, கூடுதல் போலீசார் மொத்தமாக களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
“மாணவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த கொடூரச் சம்பவம் காதல் திருமணங்களை எதிர்த்த சமூகக் கொந்தளிப்புகளை மீண்டும் விரிவாகக் காட்டுவதாகவும், மாநிலம் முழுவதும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.