பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் அருகே நேற்று நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், கடந்த காலத்தில் இதுபோன்ற தாக்குதல்களை மேற்கொண்ட தெஹ்ரீக்-இ-தொய்பா மற்றும் தலிபான் போன்ற அமைப்புகள் மீண்டும் இதில் தொடர்புடையதாக இருக்கலாம் என புலனாய்வு அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்ததையடுத்து, அங்கிருந்து பாகிஸ்தானுக்குள் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் முன்பே வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில், இஸ்லாமாபாத் குண்டுவெடிப்புக்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானின் ஒற்றுமையையும் அமைதியையும் சீர்குலைக்க இந்தியா இத்தகைய தாக்குதல்களை ஆப்கானிஸ்தான் வழியாக நடத்தி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அவரது குற்றச்சாட்டுக்கு இந்தியா தீவிரமாக பதிலளித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்வால் தெரிவித்துள்ளார் :
“பாகிஸ்தான் பிரதமரின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது. அந்த நாட்டின் ராணுவம் அரசியல் அமைப்பை சீர்குலைத்து குழப்பநிலையை உருவாக்கிய நிலையில், அதிலிருந்து மக்கள் கவனத்தை திருப்புவதற்காக இந்தியா மீது குற்றச்சாட்டு சாட்டப்படுகிறது. இது பாகிஸ்தானின் வழக்கமான உத்திதான்” என்று அவர் கூறினார்.
இந்தியாவின் கடுமையான பதிலடி தற்போது இரு நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.


















