நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக அரசின் நிதி நிர்வாகம், முதல்வர் ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கைகள், பாரதியார் விவகாரம் மற்றும் தமிழக பா.ஜ.க.வின் இந்துத்துவ அரசியல் வியூகம் ஆகியவை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழக அரசின் நிதி நிர்வாகம் மிகவும் மோசமாக இருப்பதாகச் சீமான் குற்றம் சாட்டினார்.
“தமிழக அரசு ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் உள்ளது. இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை பெறுவோரின் எண்ணிக்கையை மேலும் கூடுதலாக்கி உள்ளனர். போக்குவரத்து துறையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன்; மின்சார துறையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன். இந்தக் ‘கேடுகெட்ட கேவலமான ஆட்சி முறையை’ சாதனை என்கின்றனர்.” “திராவிடக் கட்சிகள் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தும், இன்றும்கூடத் தமிழகப் பெண்கள் ஒரு நாளைக்கு 30 ரூபாய் கூடச் சம்பாதிக்க முடியாத நிலையில்தான் உள்ளனர். பெருமைக்குரிய தமிழினப் பெண்களை, இப்படி கையேந்த வைத்துவிட்டதை நினைத்து வெட்கப்படுகிறேன்.”
பாரதியார் விழாவில் பங்கேற்றதற்காக எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த சீமான், தி.மு.க.வின் இலக்கியப் பார்வையை விமர்சித்தார். “ஆர்.எஸ்.எஸ். சார்ந்த ‘விஜில்’ இலக்கிய அமைப்பினர் என்னை பாரதி குறித்துப் பேச அழைத்தனர். நான் அங்கு சென்று பேசினேன். திராவிட இயக்கத்தினரையும், பாரதி குறித்துக் கூட்டம் போடச் சொல்லுங்கள்; அங்கும் சென்று பேசுகிறேன்.”
“பாரதியாரை பாடாத தமிழன் எவன் இருக்க முடியும். அவரைப் பாடாத தமிழன் உயிரோடு ஏன் இருக்க வேண்டும். தி.மு.க.வினருக்குக் கருணாநிதியை தவிர, வேறு புலவனே கிடையாது; தெரியாது.” மேலும், ” ‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் திராவிடர் கழகம் போல் ஒரு சமூக இயக்கம் தான்’ எனச் சொன்னது யார்?” என்றும் கேள்வி எழுப்பினார்.தமிழகத்தில் பா.ஜ.க. மேற்கொள்ளும் ஆன்மீக அரசியல் குறித்துப் பேசிய சீமான், அது வெற்றி பெறாது என்று விமர்சித்தார்.
“இத்தனை ஆண்டு இல்லாமல், திடீரென முருகன் மேல் ஏன் இந்த பக்தி? தேர்தல் வரப் போவதால், இந்த சேட்டை. மக்கள் வளர்ச்சி பற்றி சிந்திப்பவர்களுக்கு, ஜாதி, மதம், கடவுள் பற்றி சிந்திக்க நேரம் இருக்காது.” “அயோத்தியில் ராமரை வைத்து, பா.ஜ.க. அரசியல் செய்தது. ஆனால், அங்கு தாழ்த்தப்பட்டவரை வெற்றி பெற வைத்து, பா.ஜ.க.வை எதிர் அணியினர் தோற்கடித்து விட்டனர். இதேபோல்தான் இங்கும் நடக்கும். தமிழகத்தில் முருகனை கையில் எடுத்து அரசியல் செய்கிறது பா.ஜ.க. குன்னக்குடிக்கு அன்னக்காவடி எடுத்தாலும், பா.ஜ.க.வின் எண்ணம் நடக்காது.” முதலமைச்சரின் செயல்பாடுகள் மற்றும் தி.மு.க.வின் கூட்டணி அரசியல் குறித்தும் அவர் விமர்சித்தார்.
“மூன்று முறை ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் கலந்து கொள்ளாத முதல்வர் ஸ்டாலின், அமலாக்கத்துறை ரெய்டு வந்ததும், பிரதமரை போய் சந்திக்கிறார்.” “தனியார் கல்வி நிறுவன நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் முருகன் என இருவரும் பங்கேற்கும் நிலையில், தி.மு.க. அமைச்சர்களும், கூட்டணியைச் சேர்ந்த எம்.பி., கமலும் கலந்து கொள்கின்றனர். இது எந்த வகையில் சரி?” “கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தி.மு.க.தான் பாதுகாப்பு என நினைக்கின்றனர். ஆனால், பா.ஜ.க.வுக்குச் சதித் திட்டம் தீட்டிக் கொடுப்பதே தி.மு.க.தான்.” திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகப் பேசிய அவர், தி.மு.க. அரசின் காவல் துறையே இந்தப் பிரச்சினையை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டினார். “இரு சமயத் தலைவர்களை அழைத்து பேசி, இரு மத வழிபாடுகளையும் நடத்தப் பரிந்துரை செய்திருக்க வேண்டும். பிரச்சினை ஆக்கியதே தி.மு.க. அரசின் காவல் துறைதான்” என்று அவர் கூறினார்.
