தேர்தலை முன்னிட்டு பணப் பரிவர்த்தனைகள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பிய குற்றச்சாட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களுடன் பேசிய அவர், “பீஹாரில் ரூ.10 ஆயிரம் கொடுத்து வெற்றி பெற்றார்கள். அதைப் போலவே தமிழகத்திலும் ரூ.15 ஆயிரம் வரை வழங்கும் நிலை உருவாகும் வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்தார்.
தமிழகத்தில் போலி வாக்காளர்கள் குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்தும், தற்போது மட்டும் அது அதிகமாக பேசப்படுவது சந்தேகத்தை தூண்டுகிறது என்றும் அவர் கூறினார். வீடுகளின் வரவேற்பறை படங்கள் வரை வாக்கு நீக்கத்திற்கான காரணமாக பார்க்கப்படுவதாக சீமான் குற்றம்சாட்டினார். “என் படம் இருந்தாலும் ஓட்டு இருக்காது. விஜய் இருந்தாலும் இல்லை. அதுபோல ஜெயலலிதா, எடப்பாடி படங்களுடன் இருக்கும் வீடுகளிலும் ஓட்டு நீக்கப்பட வாய்ப்பு உள்ளது” எனவும் அவர் கூறினார். பாஜக சார்பில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளும் போது முஸ்லிம், கிறிஸ்துவர் வீடுகளில் வாக்குகள் சிக்குகிறதா என்ற கேள்வியையும் சீமான் எழுப்பினார்.
பீஹாரை எடுத்துக்காட்டாகக் கூறிய அவர், “பீஹாரில் 10 ஆயிரம் போட்டார்கள். நம்மிடம் 15 ஆயிரம் வரும் வாய்ப்பு உள்ளது. அதனால் நம்ம அம்மாக்கள் வங்கிக் கணக்குகளை ரெடியாக வைத்துக் கொள்ள சொல்ல வேண்டும்” என தெரிவித்தார். மேலும், ஏற்கனவே நாடு 10 லட்சம் கோடி கடன் சுமையில் இருந்தும், இன்னும் சில லட்சம் கோடி கடன் உயர்ந்தாலும் அவசரத் தேவைக்காகச் செய்வார்கள் எனவும் அவர் விமர்சித்தார்.

















