நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தில், பகலில் சீருடை அணிந்து சட்டம் காக்கும் போலீஸ்காரராகவும், இரவில் வீடுகளை உடைத்துக் கொள்ளையடிக்கும் திருடனாகவும் செயல்பட்டு வந்த கற்குவேல் (28) என்ற காவலரை நெல்லை தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த பல லட்சக்கணக்கான ரூபாய்களை ஈடுகட்டவே அவர் இந்தத் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
நெல்லை மாநகரின் விரிவாக்கப் பகுதிகளான பெருமாள்புரம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில மாதங்களாகத் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வந்தன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெருமாள்புரத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் 15 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாகப் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனர். அப்போது கிடைத்த ஒரு மர்ம கைரேகை, ஏற்கனவே குற்றப் பின்னணி உள்ளவர்களின் கைரேகையுடன் ஒத்துப்போகவில்லை. மாறாக, காவல்துறையின் தரவுத் தளத்தில் உள்ள தூத்துக்குடி ஆறுமுகநேரி காவல் நிலைய காவலர் கற்குவேலின் கைரேகையுடன் நூறு சதவீதம் பொருந்தியது அதிகாரிகளை அதிர வைத்தது.
இந்தத் தகவலை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர், தூத்துக்குடி எஸ்பி-யிடம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, கற்குவேல் ரகசியக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டார். அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டுப் பூட்டிய வீடுகளைக் கண்காணித்துக் கொள்ளையடிப்பதை உறுதி செய்த தனிப்படை போலீசார், நேற்று அதிகாலை தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் பதுங்கியிருந்த கற்குவேலை வளைத்துப் பிடித்தனர். 2017-ல் காவல் பணியில் சேர்ந்த அவர், டெல்லி பட்டாலியன் மற்றும் திருச்செந்தூர் காவல் நிலையங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதான கற்குவேலிடம் நடத்திய விசாரணையில், அவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானது தெரியவந்தது. தனது குடும்பத்தினர் வீடு கட்டுவதற்காகச் சேர்த்து வைத்திருந்த ரூ.30 லட்சம் சேமிப்பை ஆன்லைன் விளையாட்டில் முழுமையாக இழந்த அவர், அந்தக் கடனை அடைப்பதற்காகக் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார். மோகன் உள்ளிட்ட தனது கூட்டாளிகளுடன் இணைந்து நெல்லை பகுதிகளில் கைவரிசை காட்டியுள்ளார். கைதான கற்குவேலிடமிருந்து 15 பவுன் தங்க நகைகள், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக, காவலரே கொள்ளையில் ஈடுபட்ட இச்சம்பவம் தமிழக காவல்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
