அன்னூர் மன்னீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா பூத வாகனத்தில் சுவாமி வீதிஉலா மற்றும் கும்மியாட்டத்துடன் களைகட்டிய விழா

கொங்கு மண்டலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றான அன்னூர் அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயிலின் 26-ஆம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூத வாகன உலா நேற்று முன்தினம் இரவு மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக மாலையில் தேவார இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்று பக்தர்களை மெய்மறக்கச் செய்தது. அதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பூத வாகனத்தில் எழுந்தருளிய மன்னீஸ்வரர், அன்னூரின் முக்கிய வீதிகள் வழியாகத் திருவீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். வீதிஉலாவின் போது பவளக்கொடி கும்மி கலைக்குழுவினரின் பாரம்பரிய கும்மியாட்டம் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்தது.

தொடர்ந்து இன்று காலை 10:30 மணியளவில் பஞ்சமூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பூஜைகளும் விமரிசையாக நடைபெறுகின்றன. மாலை 6:00 மணிக்கு மங்கல இசை முழங்க பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலா நடைபெறவுள்ளது. நாளை (டிசம்பர் 30) காலை 11:00 மணியளவில் திருவிழாவின் முக்கிய வைபவமான திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. அன்று இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதிஉலாவும், அதனைத் தொடர்ந்து வள்ளி கும்மியாட்டமும் நடைபெறவுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 31-ஆம் தேதி காலை 10:30 மணியளவில் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுத் தேரை வடம் பிடித்து இழுக்கவுள்ளனர்.

இந்த விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளைத் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் நடராஜன், அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர். அன்னூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவதால், பாதுகாப்புப் பணிகளுக்காகப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு அன்னூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளையும் கோயில் நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டுள்ளது.

Exit mobile version