மயிலாடுதுறையில் அபிஷேக கட்டளை கொத்த தெரு பெரிய மாரியம்மன் ஆலயத்தின் 64 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா. செண்டை மேளம் காளியாட்டம் முழங்க வந்த சக்தி கரகத்தையும் தீ மிதிக்கும் பக்தர்களையும் காத்தவராயன் சாமி எதிர்கொண்டு அழைத்து இளைஞர்கள் ஆரவாரத்துடன் கோலாகலமாக நடைபெற்ற தீமிதி உற்சவத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் அபிஷேக கட்டளை கொத்ததெருவில் பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் 64ஆம் ஆண்டு தீமிதி திருவிழா உற்சவம் கடந்த மாதம் 29ஆம் தேதி துவங்கியது. தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள், சந்தன காப்பு அலங்காரம், முத்தங்கி சேவை, கஞ்சிவார்த்தல், அம்பாள் வீதி உலா காட்சி, காத்தவராயன் கதை, திருக்கல்யாணம், கழுகு மரக்காட்சி போன்ற வைபவங்கள் நடைபெற்றது. இன்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பால் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் ஸ்ரீ பெரிய மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காவிரி துலா கட்டத்தில் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு புறப்பாடு நடைபெற்றது. இதில் விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள், அலகு காவடி எடுத்த பக்தர்கள் சக்தி கரகத்துடன் செண்டை மேளம், காளி ஆட்டங்களோடு இளைஞர்களின் ஆரவாரத்தோடு வானவேடிக்கை, பட்டாசு முழங்க வீதி உலாவாக ஆலயம் வந்தடைந்தனர். அப்போது சக்தி கரகத்தையும் தீ மிதிக்கும் பக்தர்களையும் காத்தவராயன் சாமி எதிர்கொண்டு அழைக்கும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து தீக்குழியை அடைந்த சக்தி கரகம் தீ மிதிக்க, விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள், அலகு காவடி எடுத்தவர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். நிறைவாக காத்தவராயன் சுவாமியை தூக்கி வந்த பக்தர்கள் தீ மிதித்தனர். இத்திருவிழாவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
