தமிழகம் முழுவதும் சாலை விபத்துகளைக் குறைக்கவும், போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ‘தேசிய சாலை பாதுகாப்பு மாதம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டத்தில் 36-வது சாலை பாதுகாப்பு விழாவினை முன்னிட்டு, இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. திருவாரூர் புதிய இரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்துகொண்டு பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய இந்தப் பேரணியில், வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் (Helmet) அணிய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசிய ஆட்சியர், “இருசக்கர வாகனப் பயணத்தின் போது தலைக்கவசம் அணிவது உயிர்க்காக்கும் கவசமாகும். வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் முக்கிய சாலைகளில் நடப்பதைத் தவிர்த்து, நடைபாதைகளை (Footpaths) மட்டுமே பயன்படுத்த வேண்டும். விபத்துகளின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் குறைத்து, ‘விபத்தே இல்லா நிலை’ என்ற இலக்கை அடைய அனைவரும் சாலை விதிகளைத் தார்மீகக் கடமையாகப் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, ‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை முன்னிறுத்தி, பாதசாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு குறிப்புகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை ஆட்சியர் பொதுமக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் வழங்கினார். பின்னர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்து ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த சாலை பாதுகாப்பு தற்காலிகக் கண்காட்சி அரங்கினை அவர் பார்வையிட்டார். அதில் விபத்துகளைத் தவிர்க்கும் முறைகள் மற்றும் சாலை குறியீடுகள் குறித்த விளக்கப் படங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்தப் பேரணியானது திருவாரூர் புதிய இரயில் நிலையத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் 150-க்கும் மேற்பட்ட காவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அருண்செல்வன், செட்ரிக் மேன்யுவன், துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன், போக்குவரத்து கழகப் பொது மேலாளர் ராஜேந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் காளியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, துணை மேலாளர் (வணிகம்) சிதம்பரகுமார், கிளை மேலாளர் நடராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஓட்டுநர் பயிற்சி பயிற்றுநர்கள் மற்றும் காவல்துறையினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
