கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘சூயஸ்’ குடிநீர் திட்டப் பணிகள், நகரின் மையப்பகுதியான லங்கா கார்னர் பகுதியில் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளன. லங்கா கார்னர் முதல் டவுன்ஹால் வரையிலான முக்கிய வழித்தடத்தில் தற்போது பிரம்மாண்ட இரும்புக் குழாய்களைப் பதிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆனால், இப்பகுதியின் தரைப்பகுதியின் கீழே பல தசாப்தங்களுக்கு முன் அமைக்கப்பட்ட வலிமையான கான்கிரீட் கட்டமைப்புகள் மற்றும் பழைய மழைநீர் வடிகால்கள் புதைந்து கிடப்பது தற்போது பணிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. குறிப்பாக, பழைய மழைநீர் வடிகால்களைத் தூர்வாரிச் சீரமைக்காமல், அவற்றின் அருகிலேயே புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதால், சாலையின் உட்பகுதியில் கான்கிரீட் கட்டுமானங்களின் அடர்த்தி அதிகரித்துக் காணப்படுகிறது.
தற்போது ஸ்டேட் பாங்க் ரோட்டில் இருந்து வரும் மழைநீர் வாலாங்குளத்திற்குச் சென்றடையும் வகையில் புதிய ‘கான்கிரீட் பாக்ஸ்’ வடிகால்கள் அமைக்கும் பணி ஒருபுறம் நடக்கிறது. அதே சமயம், அதற்கு அடியில் இரும்பு குடிநீர் குழாய்களும் பதிக்கப்படுகின்றன. அரசு கலைக்கல்லூரி சாலையில் இருந்து டவுன்ஹால் நோக்கிச் செல்லும் பழைய குடிநீர் குழாய்களுடன் புதிய குழாய்களை இணைக்கும் பணி (Interlinking) மேற்கொள்ளப்படும் போது, தரைக்குக் கீழே உள்ள 40 ஆண்டு கால பழமையான கான்கிரீட் சுவர்களை உடைக்க முடியாமல் பொக்லைன் இயந்திரங்கள் திணறி வருகின்றன. வழக்கத்தை விடக் கூடுதல் வலிமையுடன் இந்த கான்கிரீட் கட்டுமானங்கள் இருப்பதால், ஊழியர்கள் மணிக்கணக்கில் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் வேகம் குறைந்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. “பல ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானங்கள் துல்லியமான வரைபடங்கள் இன்றி பூமிக்குக் கீழே புதைந்துள்ளன. தற்போது மழைநீர் வடிகாலுக்குக் கீழே குடிநீர் குழாய்களைக் கொண்டு செல்கிறோம். இந்த நுணுக்கமான பணியை முடிப்பது ஒருபுறமிருக்க, எதிர்காலத்தில் இந்தக் குழாய்களில் ஏதேனும் உடைப்பு அல்லது அடைப்பு ஏற்பட்டால், மேலே உள்ள கனரக கான்கிரீட் வடிகால்களைப் பாதிக்காமல் எவ்வாறு சரிசெய்வது என்பது மிகப்பெரிய தொழில்நுட்பச் சிக்கலாக உருவெடுத்துள்ளது” என அவர்கள் தெரிவிக்கின்றனர். போதிய தொலைநோக்குப் பார்வையின்றி பழைய கட்டுமானங்களை அகற்றாமல் புதிய பணிகளை மேற்கொள்வது, வருங்காலத்தில் பராமரிப்புப் பணிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
