மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு தவெகவினர் எஸ். பி. அலுவலகத்தில் மனு:-
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை துவங்கி நடத்தி வருகிறார். கடந்த 13ஆம் தேதி திருச்சியில் தனது மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்தை துவங்கினார். அந்த வகையில் வருகின்ற 20ஆம் தேதி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சார பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் மயிலாடுதுறையில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமையில் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி ஸ்டாலினிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தலைவர் விஜய் ஒலிபெருக்கி மூலம் பேச உள்ளதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். காவல்துறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிகழ்ச்சி நடத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் கோபிநாத் கூறுகையில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தன் எழுச்சியாக கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

















