ஆசிரியர்கள் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ‘ஆசிரியர் தகுதித் தேர்வு’ (TET) கட்டாயம் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயமா என்ற விவகாரம் தொடர்பான வழக்குகள் கடந்த சில ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்பட்டிருந்தன. மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்பட்ட நிலையில், நீதிபதி தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் – டெட் தேர்வு இன்றி பணியைத் தொடரலாம்.
5 ஆண்டுகளுக்கும் மேல் சேவை செய்ய வேண்டிய ஆசிரியர்கள் – டெட் தேர்ச்சி பெறுதல் கட்டாயம். டெட் தேர்ச்சி பெறவில்லை என்றால் – பணியிலிருந்து விலக வேண்டும் அல்லது கட்டாய ஓய்வு பெற வேண்டும்.
மேலும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை அரசு கட்டாயப்படுத்தலாமா? அது அவர்களின் உரிமைகளை பாதிக்குமா? என்ற கேள்வியை விசாரிக்க, இவ்வழக்கை உயர்ந்த அமர்வுக்கு மாற்றி நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக, சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தாலும், கடந்த பிப்ரவரி மாதம் அந்த மேல்முறையீட்டை திரும்பப் பெற்றது.
இதனால், தற்போது சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயப்படுத்தப்படுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. அதேசமயம், டெட் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் கூட பதவி உயர்வுக்கு மீண்டும் தேர்வு எழுத வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அரசின் பதில்
உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,
“எந்த ஆசிரியரும் கவலைப்பட வேண்டாம். தமிழக அரசு எக்காரணம் கொண்டும் ஆசிரியர்களை கைவிடாது. தீர்ப்பு முழுமையாக கிடைத்ததும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையுடன் அடுத்தடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.