ஊட்டி: விவசாயப் பெருமக்கள் அனைவரும் ஆண்டிற்கு ஒரு முறையாவது தங்கள் தோட்டங்களில் உள்ள மண்ணை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆய்வு செய்து வழங்கப்படும் மண் வள அட்டையில் (Soil Health Card) குறிப்பிட்டுள்ள உரப் பரிந்துரைகளின்படி உரமிட்டால் மட்டுமே அதிக மகசூல் பெற முடியும் என்றும் மண் ஆய்வுக்கூட உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் சர்வதேச மண் வள தினமாக (World Soil Day) உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான மண்ணின் முக்கியத்துவம் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மண் வளங்களின் நிலையான மேலாண்மையை (Sustainable Management) ஊக்குவிக்கவும், இந்த உலக மண் வள தினம் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் (FAO) அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள இத்தலார், எமரால்டு, சுரேந்தர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உலக மண் வள தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மண் ஆய்வுக்கூட உதவி இயக்குநர் பேசுகையில், விவசாயிகள் தங்கள் நிலத்தில் மண்ணின் தன்மை என்ன? அதில் எந்தெந்த சத்துகள் குறைவாக உள்ளன? என்பவற்றை அறிந்துகொள்ள மண் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
மண்ணை ஆய்வு செய்த பிறகு வழங்கப்படும் மண் வள அட்டையில், நிலத்தின் தன்மைக்கு ஏற்ற சரியான உரப் பரிந்துரைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். விவசாயிகள் அந்தப் பரிந்துரைகளின்படி மட்டுமே உரங்களை இட வேண்டும். தேவைக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உரமிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
சரியான அளவு உரப் பரிந்துரைகளைப் பின்பற்றினால், விளைச்சல் அதிகரிக்கும், அதே சமயம் உரச் செலவும் குறையும். மேலும், மண்ணின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, நீண்ட காலத்திற்கு நிலையான விவசாயம் சாத்தியமாகும் என்றும் அவர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.

















