திருச்சி நகரில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகை தந்திருக்கும் நிலையில், அவருக்கு மிக அருகில் உள்ள பீமா நகரில் உள்ள காவலர் குடியிருப்புக்குள் புகுந்து பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர் கண்முன்னே இந்தக் கொடூரச் செயல் அரங்கேறியுள்ளது. திருச்சி மாவட்டம், பீமா நகர் கீழத் தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 27). ஒரு வருடத்திற்கு முன்புதான் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. இவர் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
வழக்கம் போல இன்று காலை வேலைக்குச் செல்வதற்காகத் திருச்சி பீமா நகர் பழைய தபால் நிலையச் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்த்திசையில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், தாமரைச்செல்வனின் வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. நிலை தடுமாறி கீழே விழுந்த தாமரைச்செல்வன், அந்த நான்கு பேரும் கையில் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உயிர் பயத்தில் அங்கிருந்து அலறியடித்து ஓடி, அருகில் இருந்த காவலர் குடியிருப்புக்குள் நுழைந்தார். தப்பிச் சென்ற தாமரைச்செல்வன், காவலர் குடியிருப்பு வளாகத்தில் தில்லை நகரில் பணிபுரியும் காவலர் செல்வராஜ் என்பவரது வீடு திறந்திருந்ததால், அந்த வீட்டிற்குள் நுழைந்து கிரைண்டர் அருகில் ஒளிந்து கொண்டார். ஆனால், ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், விடாமல் துரத்தி வீட்டிற்குள் நுழைந்தது. அங்கிருந்த எஸ்.எஸ்.ஐ. செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தின் கண்முன்னே, ஒளிந்திருந்த தாமரைச்செல்வனைச் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். இரத்த வெள்ளத்தில் சரிந்த தாமரைச்செல்வன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை நேரில் கண்ட காவலர் குடும்பத்தினர் அலறிக் கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள், கொலையாளிகளைக் கல்லால் தாக்கிப் பிடிக்க முயன்றனர். ஆனால், கொலையாளிகள் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததால், அனைவரும் தூரத்தில் இருந்தே தாக்கியுள்ளனர். சண்டைக்கு இடையே கொலையாளிகளில் ஒருவர் பிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மற்ற மூவரும் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்துக் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தாமரைச்செல்வனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மிகவும் முக்கியமான விஷயமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருச்சி வந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் அவர் தங்கியுள்ள இடத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலேயே நடந்துள்ளது. உயர்மட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும் நிலையில், காவலர் குடியிருப்பு வளாகத்தில் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் கொலை நடைபெற்ற சம்பவம், சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. போலீசார் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கொலையாளிகளின் பின்னணி மற்றும் கொலையின் நோக்கம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


















