தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையப் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துத் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 11 பூக்கடைகளை, நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நேற்று அதிரடியாக அகற்றினர். கடந்த 2023-ஆம் ஆண்டு ராஜாவாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் போது, நீர்வளத்துறையினரால் பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த சில நகராட்சி கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அப்போது அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களில் 11 பேர் பேருந்து நிலையத்திலிருந்து சுப்பன் தெரு செல்லும் பாதையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துத் தற்காலிகமாகத் தகரக் கொட்டகைகளை அமைத்துப் பூக்கடைகளை நடத்தி வந்தனர். போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிப் புகார்கள் எழுந்ததையடுத்து, நகராட்சி கமிஷனர் பார்கவி சம்பந்தப்பட்ட 11 வியாபாரிகளுக்கும் கடைகளைத் தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியிருந்தார்.
ஆனாலும் வியாபாரிகள் கடைகளை அகற்ற முன்வராத நிலையில், நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. இதற்காக மண் அள்ளும் இயந்திரங்கள் (JCB) கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. நகராட்சி வருவாய் ஆய்வாளர் முனிராஜ், நகரமைப்பு அலுவலர் சலீம், வருவாய் ஆய்வாளர்கள் ராமசாமி, முனீஸ்வரன் மற்றும் தேனி காவல் ஆய்வாளர் ராமலட்சுமி ஆகியோர் முன்னிலையில் இப்பணிகள் தொடங்கின. அப்போது சில கடை உரிமையாளர்கள் அதிகாரிகளுடனும் போலீசாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையான பேச்சுவார்த்தை நடத்தாமல் கடைகளை அகற்றக்கூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, காவல் ஆய்வாளர் ராமலட்சுமி அதனைத் தடுத்து நிறுத்தி, ஆட்சேபனைகள் இருந்தால் கமிஷனரிடம் முறையிடுமாறு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் நேரடி உத்தரவின் பேரில் 11 கடைகளும் முழுமையாக இடித்து அகற்றப்பட்டன. முன்னதாக ஒரு சில வியாபாரிகள் தங்களது பொருட்களைத் தாங்களாகவே முன்வந்து அகற்றிக்கொண்டனர். இந்த அதிரடி நடவடிக்கையால் தேனி பழைய பேருந்து நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

















