மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளது. இங்கு நகராட்சி நிரந்தர மற்றும் தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளர் சுமார் 72க்கு மேற்பட்டோர் வருங்கால வைப்பு நிதி ஒப்பந்ததாரர் மூலம் பிடித்தம் செய்யப்பட்டு அவை முறையாக செலுத்தப்படவில்லை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வாரம் பணியை புறகணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒப்பந்ததாரருக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதையடுத்து மீண்டும் பணிக்கு திரும்பினர்.
இந்நிலையில், பேச்சு வார்த்தையின் படி வாக்குறுதியில் கூறிய சம்பளம் பிரச்சனை உள்ளிட்டவைகளை நிறைவேற்றவில்லை என தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மீண்டும் நேற்று முதல் பணியை புறக்கணித்துள்ளதால் நகரில் குப்பைகள் அள்ளப்படாமல் பிரதான வீதிகள்,வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் அருகே மலை போல் குவிந்து கிடக்கிறது. குப்பைகளில் இறந்த நாய் தூக்கி வீசப்பட்டு இரு தினமாக அகற்றப்படாமல் கடும் துர்நாற்றமும் சுகாதார சீர்கேடும் நிலவுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
