சென்னை :
அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோக்களுக்கு தற்காலிகமாக அனுமதி வழங்க முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் வரை எந்த அரசியல் கட்சியும் சாலைப் பிரச்சாரம் அல்லது ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை எனவும் அரசின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வை தொடர்ந்து ரோடு ஷோக்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் அவசியம் என்ற மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்றம், இதுதொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வில் விசாரிக்க உத்தரவிட்டது.
இன்று நடந்த விசாரணையின் போது, த.வெ.க. தரப்பு, “விஜயின் கூட்டங்களுக்கு மட்டுமே கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. சில கட்சிகளுக்கு 11 நிபந்தனைகள், சிலருக்கு எந்த நிபந்தனையும் இல்லை” என்று வாதம் முன்வைத்தது.
அதற்கு பதிலளித்த அரசு தரப்பின் வழக்கறிஞர், “அரசியல் கட்சிகளின் கூட்டங்களை தடுக்கவில்லை. ஆனால் ரோடு ஷோவுக்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படுகின்றன. அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்,” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலாக தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, “ரோடு ஷோக்களுக்கு விதிமுறைகள் வகுப்பது அரசின் கடமை. 10 நாட்களுக்குள் அந்த விதிமுறைகளை முடிக்க வேண்டும்,” என்று உத்தரவிட்டார்.
இதனால், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கு தற்காலிகமாக அனுமதி கிடையாது என்பது தெளிவாகியுள்ளது.
