விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநில அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சமூக நலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் என்.ஓ. சுகபுத்ரா நேரில் சென்று ஆய்வு செய்தார். நிர்வாகப் பணிகளைத் துரிதப்படுத்துவதுடன், அரசின் திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் இந்த கள ஆய்வு அமைந்தது. முதலாவதாகத் தாயில்பட்டி ஊராட்சியில், வரும் பொங்கல் திருநாள்-2026 கொண்டாட்டங்களை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட பொங்கல் வாழ்த்து மடல் அட்டைகளைப் பொதுமக்களுக்கு வழங்கி ஆட்சியர் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் “உங்கள் கனவைச் சொல்லுங்கள்” என்ற முன்னோடித் திட்டத்தைத் தாயில்பட்டியில் ஆட்சியர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், பொதுமக்களின் எதிர்காலக் கனவுகள், தேவைகள் மற்றும் குறைகளை அவர்களின் வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாகக் கேட்டறியத் தன்னார்வலர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கிய ஆட்சியர், குடும்ப அட்டைதாரர்களிடம் முறையாகத் தகவல்களைப் பெற்றுப் படிவங்களைச் சேகரிக்குமாறு அறிவுறுத்தினார். மக்கள் தங்கள் தேவைகளை அரசிடம் நேரடியாகப் பகிர்ந்து கொள்ள இது ஒரு சிறந்த பாலமாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.
ஆய்வின் ஒரு பகுதியாக, மேலக்கோதை நாச்சியார்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்குச் சென்ற ஆட்சியர் சுகபுத்ரா, அங்கு பயிலும் மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார். மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து கலந்துரையாடிய அவர், தற்போதைய பாடத்திட்ட முறைகள் மற்றும் கற்றலில் உள்ள சவால்கள் குறித்து மாணவர்களிடமே நேரடியாகக் கேட்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தினார். பின்னர், அதே ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட ‘மாஸ் கிளினிங்’ தூய்மைப் பணிகளைப் பார்வையிட்ட ஆட்சியர், தூய்மை செய்யப்பட்ட இடங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இறுதியாகக் கொங்கன்குளம் ஊராட்சியில், தொழில் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்புத் தொகை (CSR) மூலம் ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தைத் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார். இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
















