தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான பத்திரகாளி அம்மன் கோவில், விரைவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல பிரமாண்டமான வடிவமைப்புடன் மீண்டும் உருவெடுக்க இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ரூ.1000 கோடி வரை செலவிட மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
கி.பி. 1323-ஆம் ஆண்டில் காகதியப் பேரரசு காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில் 9 அடி உயரமும் அகலமும் கொண்ட பிரம்மாண்ட அம்மன் சிலை உள்ளது. தினசரி சுமார் 5,000 பக்தர்கள் தரிசனம் செய்யும் இக்கோவிலில், வருடத்திற்கு நான்கு முக்கிய திருவிழாக்கள் நடைபெறும்.
பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த கோவிலை மதுரை மீனாட்சி கோவிலின் போன்று கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். தற்போது கோவிலை சுற்றி மாட வீதிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன – இதற்கே ஏற்கனவே ரூ.100 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மேலும், நான்கு பக்கங்களிலும் பிரமாண்ட ராஜகோபுரங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான கட்டிட வடிவமைப்பிற்காக, இன்ஜினீயர்கள் குழு மதுரை மற்றும் தஞ்சை கோவில்களில் ஆய்வு செய்து, அதனை அடிப்படையாக கொண்டு வேலைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
அறநிலையத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா கூறியதாவது: “இந்த திட்டத்திற்கு நன்கொடையாளர்களிடம் இருந்து உதவி பெறப்படும். ஆய்வுப் பணிகள் முடிந்ததும், விரைவில் கோவில் புனரமைப்பு பணிகள் முழு வேகத்தில் தொடங்கும்,” என தெரிவித்தார்.