நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டங்கள் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டம் அதிகாரிகளின் மெத்தனத்தாலும், பொதுமக்களின் ஆக்ரோஷமான கேள்விகளாலும் பெரும் பரபரப்புக்குள்ளானது. வில்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு முக்கியமான அரசு அதிகாரிகள் பெரும்பாலானோர் வராததைக் கண்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள், அங்கிருந்த ஊராட்சிச் செயலாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மக்கள் குறைகளைக் கேட்க வேண்டிய அதிகாரிகள் வராமல் கூட்டத்தை நடத்துவதில் என்ன பயன் என அவர்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, அடுத்த கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்பார்கள் என உறுதி அளிக்கப்பட்ட பின்பே விவாதம் தொடங்கியது.
கூட்டத்தின் முக்கிய விவாதமாக, வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி கிராமத்தில் உள்ள பூத நாச்சியம்மன் கோவில் நிலம் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து கிராம மக்கள் மிகுந்த வேதனையுடன் புகார் தெரிவித்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை மனுக்கள் அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், பள்ளங்கி கிராமத்தில் சமுதாயக் கூடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் முறைகேடாகப் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியர் நேரில் வர வேண்டும் எனவும், அவர்கள் வரும் வரை கூட்டத்தை விட்டு நகர மாட்டோம் எனவும் கிராம மக்கள் பிடிவாதம் பிடித்தனர்.
சூழல் கைமீறிச் செல்வதைக் கவனித்த கிராம நிர்வாக அலுவலர், உடனடியாக வட்டாட்சியரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘ஸ்பீக்கர் போன்’ மூலம் மக்கள் மத்தியில் பேச வைத்தார். அப்போது பேசிய வட்டாட்சியர், அடுத்த இரண்டு நாட்களுக்குள் கோவில் நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும், சர்ச்சைக்குரிய பட்டா ரத்து செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். அதிகாரியின் நேரடி வாக்குறுதியை ஏற்றுக்கொண்ட மக்கள், போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். வருவாய், சுகாதாரம் மற்றும் தோட்டக்கலைத் துறையைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், பங்கேற்ற ஒரு சில அதிகாரிகளும் மக்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்காமல் தங்களின் செல்போன்களைப் நோண்டியபடியே அலட்சியமாக இருந்ததும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
