புதுடில்லி : டில்லியிலிருந்து அமெரிக்காவின் வாஷிங்டன் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளான சம்பவம் நடந்துள்ளது.
ஜூலை 2ம் தேதி டில்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (AI-103) வழக்கம்போல் ஆஸ்திரியாவின் வியன்னா விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது. அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொழில்நுட்ப நிபுணர்கள் உடனடியாக விமானத்தை சோதித்து பழுது சரிசெய்ய முயன்றனர். எனினும், பழுது சரிசெய்யப்படாததால் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் வியன்னாவில் இறக்கி வைக்கப்பட்டனர். பாதியில் பயணம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. பின்னர், பயணிகள் அனைவருக்கும் மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், கடந்த ஜூன் 12ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளாகி, விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் தரையில் இருந்தவர்கள் சேர்த்து 274 பேர் உயிரிழந்தனர்.
தொடர்ச்சியாக ஏர் இந்தியா விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் பயணிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன.

















