முதல் நாளே தொழில்நுட்ப சிக்கல் : சென்னை வொண்டர்லாவில் ஏற்பட்ட தடங்கல்கள் – நிர்வாக இயக்குனர் விளக்கம்

சென்னை: திருப்போரூர் அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய வொண்டர்லா தீம் பார்க் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட முதல் நாளிலேயே சில ரைட்கள் செயலிழந்ததாக பார்வையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதால், அதனைத் தொடர்ந்து நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.611 கோடி முதலீட்டில் 65 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த பார்க், நாட்டில் வொண்டர்லாவின் ஐந்தாவது கிளையாகும். டிசம்பர் 1ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றிய தொடக்க விழாவுக்கு பின்னர், நேற்று மக்கள் நுழைவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடக்க நாளுக்கான சலுகை விலையில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதால், அதிகமான மக்கள் திரண்டனர்.

ஆனால், சில ரைட்கள் செயல்படும் போது திடீரென நின்றுவிட்டதாக பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் வீடியோவுடன் பதிவிட்டனர். குறிப்பாக, பயணிகள் இருக்கும்போதே ரைடில் தொழில்நுட்ப பணிகள் நடந்ததாக கூறப்படும் ஒரு வீடியோவும் வைரலானது. இதனால் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக வொண்டர்லா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருண் விளக்கமளித்து, முதல் நாள் ஏற்பட்ட சிக்கல்களுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில், “புயல் காலநிலை இருந்தபோதும் சுமார் 2,000 பேர் பார்க் வந்தது எங்களுக்கு பெருமை. ஆனால் மோசமான வானிலை காரணமாக பல முறை மின்தடை ஏற்பட்டது. அதன் தாக்கம் சில ரைட்களில் தெரிந்தது. எங்கள் குழு உடனடியாக சரிசெய்தாலும், சில தாமதங்கள் ஏற்பட்டன. இதனால் சிரமம் அடைந்தவர்களிடம் மனமார மன்னிப்பு கேட்கிறோம்,” என்று கூறினார்.

வருகையாளர்கள் பகிர்ந்துள்ள புகார்களை நேரடியாகப் பெற்றுக் கொண்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும், “எங்கள் ரைட்கள் 100% பாதுகாப்பு சான்றிதழ்களுடன் செயல்படுகின்றன. வெளியான சில வீடியோக்கள் மிகைப்படுத்தப்பட்டவை. இவை முதல் நாள் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் மட்டுமே. 25 ஆண்டுகளாக துறையில் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம்; 5 கோடிக்கும் மேற்பட்டோர் எங்கள் பார்க்கை பயன்படுத்தியுள்ளனர்,” என்று நிர்வாக இயக்குனர் தெளிவுபடுத்தினார்.

சென்னையில் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்டமான தீம் பார்க் தொடக்கம் மக்கள் உற்சாகத்தால் நிரம்பியிருந்தாலும், முதல் நாள் ஏற்பட்ட தடங்கல்கள் தற்போது பரபரப்பாக மாறி உள்ளன. வொண்டர்லா, இனி இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Exit mobile version