தியாகச் செம்மல் நல்லகண்ணுவுக்கு ராமநாதபுரத்தில் கண்ணீர் அஞ்சலி: அரசியல் கட்சித் தலைவர்கள் திரண்டு வந்து வீரவணக்கம்!

ராமநாதபுரம் அரண்மனை முன்பு, விடுதலைப் போராட்ட வீரரும், தியாக சீலரும், தகைசால் தமிழர் விருது பெற்றவருமான ஆர்.நல்லகண்ணு மறைவுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் என்.எஸ்.பெருமாள் தலைமையில் உணர்ச்சிகரமான புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. ஒரு நூற்றாண்டு கால பொதுவாழ்விற்குச் சொந்தக்காரரான நல்லகண்ணு, தமிழக அரசியலில் எளிமைக்கும், நேர்மைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தவர். அவரது மறைவு தமிழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படும் நிலையில், ராமநாதபுரத்தில் நடைபெற்ற இந்த இரங்கல் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் சாதி, மத பேதமின்றித் திரண்டு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த புகழஞ்சலி கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் குருவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் சபீர் ஆகியோர் பங்கேற்று நல்லகண்ணுவின் தியாக வாழ்வை நினைவு கூர்ந்தனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் வெங்கடேசன், சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் சந்தானம், பத்திரிகையாளர் ராமு, தமிழ் புலிகள் கட்சியின் பொறுப்பாளர் தமிழ்வாணன் மற்றும் பெரியார் பேரவைத் தலைவர் நாகேஸ்வரன் ஆகியோரும் வீரவணக்கம் செலுத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர்கள் கே. ஜீவா, ஜெயசீலன், ராமநாதபுரம் செயலாளர் ராஜேந்திரன், ஆர்.எஸ். மங்கலம் செயலாளர் தங்கராசு, பரமக்குடி நகர் செயலாளர் கே.ஆர். சுப்பிரமணியன், திருவாடானை தாலுகா செயலாளர் ஜெயராமன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் நாகராஜன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருப்புல்லாணி ஒன்றியம் சார்பில் தகவல் தொடர்பு பொறுப்பாளர் அப்துல் இஷாக், பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தின் பொறுப்பாளர் முருகேசன் மற்றும் தோழர்கள் காத்தமுத்து, பாலா மணி உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் இறுதி மரியாதையைச் செலுத்தினர். தமிழகத்தின் உரிமைக்காகவும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் சமரசமின்றிப் போராடிய ஒரு மகத்தான தலைவனுக்கு ராமநாதபுரம் மண் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை கொடுத்தது.

Exit mobile version