மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதற்கு மாற்றாக மாநிலத்திற்கே உரிய பிரத்யேக கல்விக் கொள்கையை உருவாக்கும் திட்டத்தை முன்பே அறிவித்திருந்தது.
இந்தக் கல்விக் கொள்கையை வடிவமைக்க, ஓய்வு பெற்ற நீதிபதி த. முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளை பெற்றனர்.
சுமார் 650 பக்கங்களைக் கொண்ட மாநிலக் கல்விக் கொள்கை வரைவு 2023 அக்டோபரில் தயார் செய்யப்பட்டாலும், அதை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், 2024 ஜூலை 1ஆம் தேதி, ஓய்வு பெற்ற நீதிபதி த. முருகேசன் தலைமையிலான குழு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை அறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8) சென்னை கோட்டூபுரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டார்.
மாநிலக் கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்:
- 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை
- தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை தொடரும்
- நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்
- கல்வி, மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்
- தொடக்க நிலை முதல் பல்கலைக்கழக நிலை வரை தமிழ் வழிக் கல்வி வழங்கல்.
- 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,
“புதிய உற்சாகம் பிறக்கிறது. பள்ளி மாணவர்கள், இளைஞர்களை பார்க்கும் ஒவ்வொரு முறையும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறேன். எக்காரணம் கொண்டும் யாரும் கல்வியை பாதியில் கைவிடக்கூடாது. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்,” என்று தெரிவித்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
“அன்று பெரியார் குலக்கல்வியை எதிர்த்தார்; இன்று முதல்வர் ஸ்டாலின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரும் முன்னெடுப்பாக இது அமைகிறது,” என்று கூறினார்.