தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில், மும்மொழிக் கல்வி மற்றும் மொழி நிதி ஒதுக்கீடு குறித்து ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி தமிழ் மீது அன்பு கொண்டவர் எனச் சொல்லிக்கொண்டே, தமிழ் படிக்கும் மாணவர்களிடம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பது எவ்வாறு நியாயம் என அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு தமிழ் வளர்ச்சிக்காக ஒதுக்கிய நிதி சுமார் 150 கோடி ரூபாய் மட்டுமே என்றும், இதே காலத்தில் சமஸ்கிருதத்திற்கான ஒதுக்கீடு 2400 கோடி ரூபாய் என்பதை உதயநிதி குறிப்பிட்டார். “இதேதான் பிரதமர் மோடியின் தமிழ் பாசத்தைக் காட்டும் நாடகம்” எனவும் அவர் கடுமையாக தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, உதயநிதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.
“நம் நாட்டில் எந்த மொழிக்கும் தனியே கூடுதல் நிதி ஒதுக்கப்படும் நிலை இல்லை” என்பதை துணை முதலமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்தார். நாட்டில் உள்ள பல்கலைக்கழக எண்ணிக்கையே அந்த மொழிக்கான நிதி ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் காரணம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
“சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவற்றுக்கு உதவித் தொகையும் அதிகரிக்கிறது. தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் குறைவாக உள்ளன என்றால், புதிய பல்கலைக்கழகங்களை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். எது தடை?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், திமுகவால் வளர்ச்சி மற்றும் நல்லாட்சியைப் பற்றி பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அடுத்த சில மாதங்களில் ‘மொழி’ மற்றும் ‘வடக்கு–தெற்கு’ போன்ற பிரச்சினைகளையே தூண்டுவார்கள் என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
















