மெட்டாவுடன் தமிழக அரசு ஒப்பந்தம் : இனி வாட்ஸ்அப் மூலம் 50 அரசு சேவைகள்

தமிழக அரசு மற்றும் மெட்டா நிறுவனம் இணைந்து, மக்கள் வாட்ஸ்அப் மூலம் 50க்கும் மேற்பட்ட அரசு சேவைகளைப் பெறும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அரசு சேவைகளை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், ஒரே எண் மூலம் அணுகக்கூடிய சாட்பாட் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தபடியே அத்தியாவசிய சேவைகளை எளிதாகப் பெறலாம்.

மின் மற்றும் குடிநீர் கட்டணம், வரி செலுத்துதல், ரேஷன் கார்டு தொடர்பான சேவைகள், அரசு பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் டிக்கெட் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் பெறக்கூடியதாக உள்ளன. இந்த சேவை முதற்கட்டமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஒப்பந்த கையெழுத்து விழாவில், “மக்களை மையமாகக் கொண்ட உறுதியான நிர்வாகத்தை உருவாக்குவதே தமிழக அரசின் குறிக்கோள். இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் முன்னணி வகிக்கும் வகையில் இந்த முயற்சி உதவும். மெட்டா நிறுவனத்துடன் இணைந்திருப்பது, இந்த பயணத்தில் ஒரு முக்கியமான படியாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தின் பரவலான பயன்பாட்டை அரசு சேவைகளுடன் இணைக்கும் இந்த முயற்சி, மக்களுக்கு சேவைகள் எளிமையாகவும் விரைவாகவும் கிடைக்க வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

Exit mobile version