37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கிய தமிழக அரசு. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் ‘ராக்கெட் வேகத்தில்’ முன்னேறுகிறது – அமைச்சர் கோ.வி.செழியன்” பேட்டி.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட அன்னியூர் கிராமத்தில், நடப்பு கல்வியாண்டில் தொடங்கிய புதிய அரசு கலைக் கல்லூரி தற்போது தற்காலிகமாக அங்குள்ள அரசு பள்ளி கட்டிடத்தில் இயங்கி வருகிறது.இந்நிலையில் இன்று காலை, உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி. செழியன் அவர்கள், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவாவுடன் கல்லூரியை திடீரென ஆய்வு செய்தார். இதில் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் குறித்து பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடி கேட்டறிந்தார். மேலும் ‘புதுமை பின்’, ‘தமிழ் புதல்வன்’ உள்ளிட்ட திட்டங்கள் பற்றியும் பரிசீலனை மேற்கொண்டார்.இதனைத் தொடர்ந்து, கல்லூரி புதிய நிரந்தர கட்டிடம் அமைவிடத்தையும் ஆய்வு செய்த அமைச்சர், பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், முன்னாள் எம்.பி. பொன் கௌதம சிகாமணி மற்றும் பலரும் உடனிருந்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி. செழியன், “உயர் கல்வி துறையில் தமிழ்நாடு நாட்டின் முன்னணியில் உள்ளது. முதலமைச்சர் 37 புதிய கலை அறிவியல் கல்லூரிகளை துவங்க உத்தரவிட்டுள்ளார். இவற்றில் 16 புதிய கல்லூரிகள் இந்நிதியாண்டில் தொடங்கப்பட்டுள்ளன. அரசு வேகம் ‘ஆமை வேகம்’ என கூறப்படும் பழமொழியை பின் தள்ளி, தமிழக அரசு இப்போது ‘ராக்கெட் வேகத்தில்’ கல்வி முன்னேற்றம் சாதித்து வருகிறது,” என தெரிவித்தார்.மேலும், “அன்னியூரில் தொடங்கியுள்ள கல்லூரிக்கான தேவைகளை நேரில் கேட்டறிந்தோம். மாணவிகள் கோரிய மாலை நேர பேருந்து வசதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தியுள்ளோம். கேண்டீன் மற்றும் உணவுவிடுதி வசதிகளையும் விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்றும் அவர் கூறினார்.
