மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தாத தமிழக அரசுக்கு கண்டனம், கையில் பாதிக்கப்பட்ட பயிர்களுடன், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை, கடந்த ஜனவரியில் பெய்த மழைக்கு நிவாரணம் அறிவித்துவிட்டு பணம் வழங்காத அமைச்சரின் புகைப்படத்துடன் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண் துறை பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கடந்த மாதம் துவங்கி இரண்டு முறை மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்தான கணக்கெடுப்பை வேளாண்துறை அதிகாரிகள் உரிய முறையில் நடத்தவில்லை என்று தெரிவித்து அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா நாற்றுகளை கையில் ஏந்தியபடி விவசாயிகள் அதிகாரிகளிடம் தங்கள் குறைகளை தெரிவித்தனர். இன்னிலையில் கடந்த ஜனவரி மாதம் சம்பா அறுவடையின் போது பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் 63 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை அந்த பணம் வழங்கப்படவில்லை. 10 மாதங்கள் கடந்த நிலையில் அமைச்சரின் உத்தரவு என்ன ஆயிற்று என்று கேள்வி எழுப்பிய விவசாயிகள், தொலைக்காட்சிகளில் அமைச்சர் சொன்ன செய்தியில் அமைச்சர் புகைப்படத்துடன் அட்டைகளை கையில் ஏந்தி நிவாரணம் குறித்து கேள்வி எழுப்பியதால் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை அருகே உருவாகியுள்ள புயல் காரணமாக மேலும் விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
