தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் இரண்டு நாள் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைபெற்ற பிரம்மாண்டமான “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழாவில் அவர் கலந்துகொண்டார்.
இன்று காலை திருச்சி வந்தடைந்த அமித்ஷா, முதலில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் – அகிலாண்டேஸ்வரி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்தார். அங்கு அவருக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் உடன் சென்றனர். தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த அமித்ஷாவைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரண்டிருந்தனர். பலத்த பாதுகாப்பையும் மீறி, மக்களுடன் கைகுலுக்கி அவர்களின் வரவேற்பை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.
ஸ்ரீரங்கம் மன்னார்புரம் ராணுவ மைய மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழா விழாக் கோலம் பூண்டிருந்தது. தமிழகத்தின் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், தூய தமிழ் கலாச்சார உடையான வேட்டி, சட்டை மற்றும் அங்கவஸ்திரம் அணிந்து அமித்ஷா மேடைக்கு வருகை தந்தார். அவருக்குப் பாரம்பரிய முறைப்படி பரிவட்டம் கட்டப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மைதானம் முழுவதும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 1,008 மண்பானைகளில் பெண்கள் ஒரே நேரத்தில் தீ மூட்டி பொங்கலிட்டனர். “பொங்கலோ பொங்கல்” என்ற முழக்கங்களுக்கு இடையே, அமித்ஷா பொங்கல் பானைக்கு ஆரத்தி காண்பித்து விழாவைத் தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு கூடியிருந்த மக்களுக்குத் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த விழாவில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

















