திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது.
இந்த கூட்டத்தில், மாவட்ட நில அளவை அலுவலகத்தில் பணியாற்றும் ஆய்வாளர் ஒருவர், அவசர அவசரமாக நில ஆவணங்களில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் புகார் அளித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரதாப், ஆய்வாளரைக் கூப்பிட்டு நேரில் விசாரணை நடத்தினார்.
விசாரணையின் போது, “யாருடைய அனுமதியுடன் நீங்கள் இந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டீர்கள்? தாசில்தாருக்கே கீழ் நீங்கள் பணிபுரிகிறீர்கள் தெரியுமா? ஏன் இவ்வளவு விரைவில், காலை 7 மணிக்கே கையெழுத்திட்டு அனுப்பிவிட்டீர்கள்?” என்று அவர் கடுமையாக கேள்வி எழுப்பி, கண்டித்தார்.
மேலும், “இப்படி சர்வேயர் டிபார்ட்மெண்ட் செயல்பட்டால் நாடு எங்கே போகும்?” என ஆவேசமாக கூறிய ஆட்சியர், “நான் கேட்ட கேள்விக்கு நேரடி பதில் கூறுங்கள்” என தொடர்ந்து கோபம் வெளிப்படுத்தினார்.
இதற்கு பதிலளிக்க முடியாமல் தயக்கத்துடன் “அதைக் கவனிக்காமலே கையெழுத்திட்டேன், வேறு ஒருவர் என்னிடம் கொடுத்தார்” என கூறிய ஆய்வாளரிடம், “யார் அந்த நபர்? அவரையும் அழைத்து வாருங்கள். இல்லையென்றால், இருவரையும் சஸ்பெண்ட் செய்து, விசிலென்ஸ் விசாரணைக்குக் கொடுக்கப்படும்” என எச்சரித்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஆட்சியர் பிரதாப் எடுத்த நடவடிக்கையை பொதுமக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்.