வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை SIR தற்காலிகமாக நிறுத்தும்படி கேரள அரசு தாக்கல் செய்த மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கேரளத்துடன் சேர்ந்து தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளதால், அவை தொடர்பான மனுக்களுக்கும் ஆணையம் விளக்கம் தர வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த மாதம் 4ம் தேதி முதல் நாடு முழுவதும் 12 மாநிலங்களில் SIR நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால், அதே நேரத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மேற்கொள்ளுவது நிர்வாக ரீதியாக பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறி கேரள அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது.
நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, கேரளா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், தேர்தல் தயாரிப்புகளுக்கு ஏற்கெனவே பெருமளவான அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில் SIR பணிகளுக்கும் பணியாளர்கள் தேவைப்படுவதால் நிர்வாகத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் போன்ற செயல்பாடுகள் தாமதமடையலாம் என்றும் வாதிட்டார். இதற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தாலும், நீதிமன்றம் ஆணையத்தின் கருத்தை ஏற்காமல், தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்களுக்கு ஆணையம் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தியது. பின்னர் விசாரணை வரும் 26ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
கேரள அரசு தனது மனுவில், உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருவதால், அதே நேரத்தில் SIR நடவடிக்கைகளை முன்னெடுத்தால் வாக்காளர்களின் உரிமைகள் பாதிக்கும் சூழ்நிலை உருவாகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதேபோன்று, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளமும் SIR பணிகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளன.
