புதுதில்லி :
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (S.I.R) நடவடிக்கையை எதிர்த்து பல கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள S.I.R. திட்டத்தை ரத்து செய்யக் கோரி, திமுக, காங்கிரஸ், சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தன. இவை மீதான விசாரணை இன்று (நவம்பர் 11) தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.
திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது கபில் சிபல் தெரிவித்ததாவது:
“தமிழ்நாட்டில் தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. இந்நேரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது பொருத்தமானது அல்ல. அதிகாரிகள் மழை மற்றும் வெள்ளம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டிசம்பரில் கிறிஸ்துமஸ், ஜனவரியில் பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்கள் வருகின்றன. இதனால் பொதுமக்கள் திருத்தப் பணிகளில் முழுமையாக பங்கேற்க முடியாது,” என்றார்.
“பின்தங்கிய பகுதிகளில் இணைய வசதி குறைவாக உள்ளது. ஒரே மாத காலத்தில் லட்சக்கணக்கான விவரங்களை பதிவேற்றுவது சாத்தியமற்றது. இதனால் வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்படும்,” எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “எல்லா விவகாரங்களுக்கும் தேர்தல் ஆணையம் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்வார்கள்,” என்று குறிப்பிட்டனர்.
பின்னர், திமுக, காங்கிரஸ், சி.பி.எம் உள்ளிட்ட ஆறு மனுக்களின் நகல்களை தேர்தல் ஆணையத்துக்கு வழங்கவும், அவற்றுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.
மேலும், “S.I.R. நடவடிக்கை சட்டபூர்வமானதா?” என்ற கேள்வியையும் உச்சநீதிமன்றம் தனியாக விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
