கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் என்ற இளைஞருக்கு, காதல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகரத்னா, அரிய வகையில் தமிழில் நேரடியாகக் கேள்வி எழுப்பியதும், இறுதியில் “நல்லா இருங்கோ” என்று வாழ்த்தியதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த நவீன், பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து, அவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். இதனால் அந்தப் பெண் கர்ப்பமாகியதாகக் கூறப்படுகிறது. பின்னர், திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நவீன் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கீழமை நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இதனைத் தொடர்ந்து, நவீன் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
நீதிமன்றத்தில் தமிழில் கேள்வி
நீதிபதிகள் நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. காணொலி காட்சி மூலம் ஆஜரான நவீனிடம், நீதிபதி நாகரத்னா தமிழிலேயே “எப்போது திருமணம் செய்வீங்க ?” என்று கேட்டார். அதற்கு நவீன், “சிறையிலிருந்து வெளியே வந்ததும் திருமணம் செய்துகொள்கிறேன்” என்று உறுதியளித்தார்.
அதன்பின் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும், அவரை திருமணம் செய்ய சம்மதமா என்று நீதிபதி நேரடியாகக் கேட்டார். இதன் பேரில், நிபந்தனையுடன் நவீனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
விதிக்கப்பட்ட நிபந்தனைகள்
நவீன் உடனடியாக அந்தப் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும். திருமணத்தின் புகைப்படங்கள், ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். திருமணத்திற்குப் பின், மனைவியை பாதுகாப்பாகவும், கண்ணீரில்லாமலும் வாழ வைக்க வேண்டும். இந்நிபந்தனைகளை மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும். மேலும், நவீனின் பெற்றோரிடமும் நீதிபதி அறிவுறுத்தி, “மகன் ஜாமீனை இழக்காமல் இருக்க, மருமகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்” என கூறினார்.
“நல்லா இருங்கோ” – வாழ்த்து
சாதாரணமாக, உச்ச நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே விசாரணை நடைபெறும். ஆனால், இந்த வழக்கின்போது தமிழில் பேசியது விசேஷமாக இருந்தது. “பெங்களூரில் வசித்தபோது அக்கம் பக்கத்தில் இருந்த தமிழ் குடும்பத்தின் மூலம் தமிழ் கற்றுக்கொண்டேன். எனக்கு மராத்தி, கொங்கணி மொழிகளும் தெரியும்” என நீதிபதி நாகரத்னா தெரிவித்தார்.
விசாரணை முடிவில், பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி “நல்லா இருங்கோ” என தமிழில் வாழ்த்திய அவர், வழக்கை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்தார். இந்த சம்பவம், நீதித்துறையில் மொழியின் முக்கியத்துவத்தையும், சமூகப் பொறுப்புணர்வையும் வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது.