உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த பி.ஆர். கவாய், அலுவல் நாளான இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். கடந்த மே 14ஆம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற அவர், திங்கட்கிழமை 65 வயதை எட்டுவதால் சட்டப்படி ஓய்வு பெறுகிறார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற அவருக்கான அநுசரண நிகழ்வில் உரையாற்றிய கவாய், “நான் புத்த மதத்தை பின்பற்றுபவன் என்றாலும், மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் இயங்கியேன்” என்றார். ஹார்வர்ட், கொலம்பியா உள்ளிட்ட பல சர்வதேச கல்வி நிறுவனங்களில் அரசியலமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சொற்பொழிவுகளை வழங்கிய அனுபவமும் அவர் பெற்றுள்ளார்.
2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட கவாய், தனது பணிக்காலத்தில் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கினார். அதில் ஜம்மு–காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் செல்லும் என கூறிய தீர்ப்பு, தேர்தல் பத்திரத் திட்டங்களை ரத்து செய்த உத்தரவு உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. மேலும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு நிர்ணய காலக்கெடு விதிக்க முடியாது என்ற அரசியல் சாசன அமர்வுக்கும் அவர் தலைமை தாங்கினார்.
கவாயின் ஓய்வைத் தொடர்ந்து, 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் வரும் திங்கட்கிழமை பொறுப்பேற்க உள்ளார்.

















