கோவையில் உள்ள பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில், ஓர் அடையாளம் தெரியாத நபர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, தன்னை சிலர் பின்தொடர்கின்றனர் என காவலரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர், காவலரின் கவனத்திற்கு தெரியாமல் முதலாவது மாடியில் உள்ள கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் அறைக்குள் சென்று, தனது வேஷ்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் இன்று காலை 7 மணிக்கு காவலர்கள் பணிக்கு வந்தபோதுதான் தெரியவந்தது. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டு, சிசிடிவி பதிவுகள், கைரேகைகள், தடயங்கள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன.
பின்னர் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், தற்கொலை செய்த நபர் “மனநலம் பாதிக்கப்பட்டவர்” எனத் தெரிவித்தார். அவருடைய பாக்கெட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில், அவர் ராஜன் என்றும், சாமிசெட்டிபாளையம் பகுதியில் வசிப்பவராகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சட்ட நடவடிக்கை வரும்
சம்பவம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடைபெறவிருக்கிறது. அலட்சியமாக இருந்த காவலர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது “லாக்கப் டெத்” அல்ல என்றும், காவல் நிலையத்தில் நடந்த தனிப்பட்ட தற்கொலை எனவும் காவல் ஆணையர் விளக்கமளித்தார்.
இதனிடையே, ராஜன் காவல் நிலையம் வருவது, பேசுவது உள்ளிட்ட சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.