தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளை உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், மதுரை மாநகரின் முக்கிய சந்தைப் பகுதிகளான யானைக்கல், சிம்மக்கல், மத்திய காய்கறி மார்க்கெட் மற்றும் பூச்சந்தை ஆகிய இடங்களில் பொங்கல் பொருட்கள் விற்பனை முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடித்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர், தேனி மாவட்டம் உத்தமபாளையம் மற்றும் ஆண்டிபட்டி போன்ற பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் கரும்புகள் கொண்டு வரப்பட்டு, யானைக்கல் தரைப்பாலத்தில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 100 லோடு கரும்புகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், மேலும் 100 லோடு கரும்புகள் இருப்பில் உள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். கரும்பு மொத்த சந்தையில் 10 கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று தரத்திற்கு ஏற்ப 600 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்கிச் செல்லும் சில்லறை வியாபாரிகள், ஜோடி கரும்பை 100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலான விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கலிட மக்கள் ஆர்வம் காட்டி வருவதால், மதுரை ஆரப்பாளையம் பகுதியில் மண்பானை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிறிய வகை பானைகள் 100 ரூபாய் முதலும், அலங்கரிக்கப்பட்ட பெரிய பானைகள் 500 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுடன் பொங்கல் வைப்பதற்குத் தேவையான மண் அடுப்புகளும் 200 ரூபாய் முதல் பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பண்டிகையின் மங்கலப் பொருளான மஞ்சள்கிழங்கு கொத்துகள் சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து நேற்று முதல் மதுரையின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு ஜோடி மஞ்சள்கொத்து 50 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் இதனைப் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். அத்துடன் பொங்கலன்று படைக்கப்படும் பனங்கிழங்கு விற்பனையும் களைகட்டியுள்ளது; தரம் வாரியாகப் பிரிக்கப்பட்ட 24 கிழங்குகள் கொண்ட கட்டு 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று அரசு விடுமுறை தினம் என்பதால், குடும்பம் குடும்பமாக மக்கள் சந்தைகளுக்குப் படையெடுத்தனர். இதனால் யானைக்கல் மற்றும் சிம்மக்கல் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதுடன், போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. காய்கறி மார்க்கெட்டுகளில் பொங்கலுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பூச்சந்தையில் பூக்களின் விலையும் சற்றே உயர்ந்திருந்தாலும், மக்கள் ஆர்வத்துடன் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முக்கிய சந்திப்புகளில் கூடுதல் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தூங்காநகரம் முழுவதும் பொங்கல் கலைகட்டியுள்ள நிலையில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என இருதரப்பினரும் இந்த ஆண்டு பொங்கல் விற்பனை திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
















