விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏற்பட்ட ஒரு விபத்துக் காட்சி தற்போது சிசிடிவி மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முத்துலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த மதன் குமார் தனது சகோதரி மற்றும் இரண்டரை வயது, ஒரு வயது ஆகிய இரண்டு குழந்தைகளுடன் தனியார் பேருந்தில் மதுரையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார்.
பேருந்தின் முன்பக்க படிக்கட்டு அருகே அமர்ந்திருந்த மதன் குமார் மடியில் இரண்டரை வயது குழந்தை இருந்தது. ஒரு வயது குழந்தை அவரது சகோதரியின் மடியில் இருந்தது. இந்த நிலையில், பேருந்து மீனாட்சிபுரம் விலக்கு அருகே வந்தபோது, ஓட்டுனர் திடீரென சடன் பிரேக் போட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நிலை தடுமாறிய மதன் குமார், தனது குழந்தையுடன் பேருந்துக்குள் கீழே விழந்தார். அதே நேரத்தில் சகோதரியின் கையில் இருந்த ஒரு வயது குழந்தை கையில் இருந்து தவறி சாலையில் விழுந்தது.
சாலை அருகில் இருந்த பொதுமக்கள் அதனை உடனடியாக மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். அந்த குழந்தையும், இரண்டரை வயது குழந்தையும் சிறிய காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். ஆனால் மதன் குமாருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கரமான தருணங்கள் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வெளியான நிலையில், சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவி வருகிறது.