சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இத்தகைய துயரச்சம்பவங்கள் இனி நடைபெறாதவாறு அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதி ஏற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நான்கு நாட்கள் நடைபெறும் சட்டசபைக் கூட்டத் தொடர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நேற்று தொடங்கியது. அதன் முதல் நாளில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில், கரூர் துயரச் சம்பவம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் முன்வைக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் விரிவான விளக்கம் அளித்தார்.
அவர் தெரிவித்ததாவது:
“தவெக சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அரசு 11 நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொண்டு அனுமதி அளித்தது. கூட்டத்தின் பாதுகாப்புக்காக மொத்தம் 606 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். கோரிக்கை மனுவில் 10,000 பேர் பங்கேற்பார்கள் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அதைவிட அதிகமான மக்கள் திரண்டனர். மேலும், தவெக தலைவர் விஜய், அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து ஏழு மணி நேரம் தாமதமாக வந்தது கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “கூட்டத்திற்கான அடிப்படை வசதிகள், குடிநீர், உணவு, பெண்களுக்கான தனி வசதிகள் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டனர். மீட்புப் பணிக்காக வந்த ஆம்புலன்ஸ்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு மாறாக, அதே இடத்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அதிமுக கூட்டம் ஒழுங்காக நடந்தது. அப்போது 12,000 பேர் பங்கேற்றிருந்தாலும் எந்தத் துயரமும் நிகழவில்லை,” எனவும் விளக்கமளித்தார்.
தொடர்ந்து முதல்வர் உருக்கமாக கூறுகையில்,
“நான் 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் பல பெரிய நிகழ்வுகளை நடத்தியிருக்கிறேன். சட்ட விதிமுறைகளையும் பொது ஒழுங்கையும் மதித்து நடத்தினால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. விதிகளை மீறும்போது பாதிக்கப்படுவது கட்சித் தொண்டர்கள்தான். இதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும். ஆனால், முக்கியமாக கரூர் போன்ற துயரச்சம்பவங்கள் இனி ஒருபோதும் நிகழக்கூடாது என்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதி ஏற்க வேண்டும்,” என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.